அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 4 ரிசர்வ் தொகுதிகளை கைப்பற்றி பாஜக சாதனை படைத்துள்ளது.
தலைநகர் டெல்லியில், அம்பேத்கர் நகர், கோகல்பூர், சீமாபுரி, மங்கள்புரி, சுல்தான்பூர் மஜ்ரா, பவானா, கரோல் பாக், படேல் நகர், தியோலி, மடிபூர், கொண்டிலி மற்றும் திரிலோக்புரி ஆகிய 12 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 மற்றும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி இந்த 12 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதேபோல், பாஜகவும் கடந்த இரண்டு தேர்தல்களாக ஒரு ரிசர்வ் தொகுதியில் கூட வெற்றிபெற முடியாத நிலையில்தான் இருந்துவந்தது. ஆனால், அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், பவானா, மங்கள்புரி, மடிபூர் மற்றும் சீமாபுரி ஆகிய 4 எஸ்சி தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. அதிலும், குறிப்பாக, மங்கள்புரி தொகுதியில் பாஜக முதல்முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. அதேநேரம், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.
அம்பேத்கரின் பாரம்பரியத்தையும், புகழையும் கையாள்வது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் பாஜக தலைநகரில் 4 ரிசர்வ் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பட்டியலின மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை ரிசர்வ் தொகுதியில் தீவிர பிரச்சாரங்களின் வாயிலாக கொண்டு சேர்த்ததே பாஜகவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.














