ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பொக்காரோ மாவட்டம் சந்திரபுரா என்ற இடத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மீர் பேசினார். அவர் பேசுகையில், “ஜார்க்கண்டில் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால், டிசம்பர் 1-ம் தேதி முதல், காஸ் சிலிண்டரின் விலை, ரூ.450 ஆக குறைக்கப்படும். இந்துக்கள், முஸ்லிம்கள், எஸ்.சி., எஸ்.டி., ஊடுருவல்காரர்கள் என அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி வழங்கப்படும்’’ என்றார்.
குலாம் அகமது மீரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் பன்வெல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கூறுகையில், “வாக்குகளை பெறுவதற்காக நாட்டுடனும், உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்துடனும் அவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) விளையாடும் விளையாட்டுக்கு இது எடுத்துக்காட்டு” என்றார்.
ஜார்க்கண்ட் பாஜக பொறுப்பாளர் சிவராஜ் சிங் சவுகான், “இதுவே காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் லால் கிஷோர் நாத் ஷாதியோ கூறுகையில், ‘‘ஜார்க்கண்டில் ஊடுருவல்காரர்கள், இந்து-முஸ்லிம்களுக்கு அப்பால் பாஜகவால் செல்ல முடியவில்லை. மத அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதை உணர்ந்ததால் அவர்கள் மனதளவில் திவாலாகிவிட்டனர்’’ என்றார்.














