ஜம்மு காஷ்மீர் எல்லையில் மக்களின் பாதுகாப்புக்காக கூடுதல் பதுங்கு குழிகள் அமைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது காஷ்மீர் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் படை பீரங்கி மற்றும் துப்பாக்கிகளால் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை கிராமங்களில் வசித்த பலரது வீடுகள் சேதம் அடைந்தன. கால்நடைகள் இறந்தன. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ, பாகிஸ்தான் குண்டு வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராஜோரி மாவட்டத்தை பார்வையிட்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்பு, எல்லைப் பகுதியில் பீரங்கி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றது. இதில் குப்வாரா, உரி மற்றும் பூஞ்ச் பகுதியில் ஏராளமான வீடுகள், வழிபாட்டு தலங்கள் சேதம் அடைந்தன. அதிக பாதிப்புகளை சந்தித்தாலும், மக்கள் ராணுவத்துக்கு துணையாக நின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணியில் உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சேதங்கள் மதீப்பீடு செய்யப்பட்டு விரைவில் நிவாரணம் அளிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் தற்போது 9,500 பதுங்கு குழிகள் உள்ளன. மேலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட வேண்டும் என இங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் அவற்றை விரைவில் கட்டுவோம். பதுங்கு குழிகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது. இவ்வாறு அதல் துலோ கூறினார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தங்கதர் பகுதியில் சமுதாய பதுங்கு குழிகளை நேற்று ஆய்வு செய்தார். குப்வாரா மக்களை சந்தித்தபின் பேட்டியளித்த அவர், ‘‘ சேதங்களை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்தவுடன், மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும்’’ என்றார்.