இயக்குநர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படமும் ‘வட சென்னை’யை மையப்படுத்திய கதைதான். இதனால், இது ‘வட சென்னை 2’ படம் என்றும் ‘வட சென்னை’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அதன் உரிமைக்காக நடிகர் தனுஷ் ரூ.20 கோடியை வெற்றிமாறனிடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து வெற்றிமாறன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது அடுத்த படத்தில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார். அதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
‘வாடிவாசல்’ காலதாமதம் ஆகும். நடிகர்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்புக்காகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. அதற்கு அதிக நேரம் காத்திருக்க முடியவில்லை என்பதால், சிம்பு நடிப்பில் ஒரு படம் பண்ணலாம் என்று தயாரிப்பாளர் தாணு சொன்னார். சரி என்றேன். உடனடியாக அந்த படம் முடிவாகிவிட்டது. இது ‘வடசென்னை 2’ ஆக இருக்குமா? என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் ‘வட சென்னை 2’ இல்லை. அதில் தனுஷ் நடிப்பார். ஆனால் இதுவும் ‘வட சென்னை’ உலகத்தில் நடக்கும் கதைதான். அந்தப் படத்தில் இருக்கும் சில கதாபாத்திரங்கள் இந்தக் கதைக்குள்ளும் இருக்கும்.
‘வடசென்னை’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்தான். அவர் அனுமதியின்றி அந்த படத்தில் உள்ள காட்சிகளையோ, கதாபாத்திரங்களையோ பயன்படுத்த முடியாது. அவர் ‘காப்பிரைட்’ வைத்திருக்கிற ஒரு விஷயத்தைப் பெறுவதற்கு அவர் பணம் கேட்க அனைத்து உரிமையும் உண்டு. ஆனால், இந்தப் படத்தை ஆரம்பிக்க இருப்பதாக தனுஷிடம் சொன்னபோது, ‘நீங்கள் தாராளமாக இதில் உள்ள கதாபாத்திரங்களையோ, காலகட்டத்தையோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான என்.ஓ.சி.யை தரச் சொல்கிறேன். எனக்கு பணம் எதுவும் வேண்டாம்’ என்று சொன்னார்.
இது இப்படி இருக்கும்போது அவர் என்னிடம் பணம் கேட்டதாக, சில யூடியூப் சேனல்களில் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.














