தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் முத்துக்காளை. இவர் மனைவி மாலதி (47), மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டது.
நினைவில்லாமல் இருந்த அவருடைய மேல் சிகிச்சைக்காக முதல்வர் விஜய் உதவ வேண்டும் என முத்துக்காளை சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தார். இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன், கீழ்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று முத்துக்காளை மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாலதி நேற்று காலை உயிரிழந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான ராஜபாளையம் அருகிலுள்ள திருக்கோதையார்புரத்துக்கு இறுதிச்சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மனைவியை இழந்த முத்துக்காளைக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
