திரைப்படங்களில் டப்பிங் பேசும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆரம்பத்தில் எந்த வாய்ப்பும் எளிதாக எனக்கு கிடைத்துவிடவில்லை. தங்களை ‘ப்ரமோட்’ பண்ணிக்கொள்வதற்கு இப்போது இருப்பது போல, அலைபேசியோ, ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களோ அப்போது இல்லை.
ஒவ்வொரு தயாரிப்பு நிர்வாகியாக போய் பார்க்க வேண்டும், இயக்குநர்களைச் சந்திக்க வேண்டும், டப்பிங் ரைட்டர்களைப் பார்க்க வேண்டும், நேரடிப் படங்கள் என்றால் அசோசியேட், அசிஸ்டென்ட் இயக்குநர்கள் என பலரைச் சந்திக்க வேண்டும், அப்போதுதான், அவர்களால்தான் வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி அலைந்தும் எனக்கு ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என் தந்தை நிலச்சுவான்தாரராக இருந்தாலும் நான் சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். அப்பாவிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று வீம்பு.
அதனால் புரொடக் ஷன் மானேஜர்கள், டப்பிங் ரைட்டர்கள், அசோசியேட்டுகள் ஆகியோரை பார்ப்பது என்று அலைந்தேன். என் அக்கா பெரிய டப்பிங் ஆர்டிஸ்ட் என்பதால், சிலருக்கு மனம் இருந்தாலும் வாய்ப்பு கொடுக்க தயங்கினார்கள்.
சேது படத்தில்…
நான் எல்லோரிடமும் சாதாரணமாகப் பழகுவேன், நான் பழகும் முறை, எல்லோரிடமும் அன்பாக இருப்பது, இது எல்லாம் பிடித்து, பிறகுதான் என்னை டப்பிங் பேசுவதற்கு அழைத்தார்கள்.
அந்த மாதிரிதான் அழைக்கப்பட்டு ‘கூடெவிடே’ என்ற படம் மூலம் ஆரூர்தாஸ் ஐயா யூனிட்டில் இணைந்தேன். அப்போது, நடிகர் ரவி மோகனின் தந்தையார் எடிட்டர் மோகன் அப்பா நிறைய டப்பிங் படங்கள் பண்ணிக்கொண்டிருந்தார்.
ஆரூர்தாஸ் ஐயா டீம் மூலமாக அறிமுகமாகி, நான் அப்பா என்று கூப்பிடும் அளவுக்கு நெருக்கமானேன். நடிகர் ரவி மோகனும், ஜெயம் ராஜாவும் என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார்கள்.
எடிட்டர் மோகன் அப்பா பற்றி சொல்ல வேண்டும் என்றால், சரியான திட்டமிடல் அவரிடம் உண்டு. ‘டப்பிங் இன்னைக்கு ஆரம்பிக்குது; இன்னைக்கு முடியுது; படம் இன்னைக்கு ரிலீஸ்; இதுதான் டைட்டில்’ என்று பிளான் பண்ணி பண்ணக் கூடியவர்.
பிரம்மானந்தம்
டப்பிங்கில் என்ன சந்தேகம் கேட்டாலும் சொல்லித்தருவார். காலையில் டப்பிங் தியேட்டர் வந்து விட்டார் என்றால், காலையில் டிபன் சாப்பிடும் நேரம், மதியம் சாப்பாடு சாப்பிடும் நேரம், சாயங்காலம் டிபன் சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நின்றுகொண்டே இருப்பார். அவரின் பல படங்களுக்கு நான் டப்பிங் பேசியிருக்கிறேன்.ஒரு தகப்பனுக்கும் மகனுக்குமான ‘பாண்டிங்’ எங்களுக்குள் இருந்தது. இப்போதும் இருக்கிறது.
ஒரு முறை, ஒரு மொழிமாற்று படத்துக்கான டப்பிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வசனம், ஒரு பெயரைச் சொல்லி, ‘அவர் பத்து தடவைக்கு மேல் போன் பண்ணிட்டார் சார்’ என்று ஒரு டயலாக்.
டப்பிங் படம் என்பதால் பேசுகிறவரின் உதட்டசைவுக்கு ஏற்ப சரியான அளவில் வசனம் இருக்க வேண்டும். ஆனால், இந்த வசனம் உதட்டசைவை தாண்டி செல்கிறது. பலமுறை அதை மாற்றி மாற்றிப் பேசியும் ‘லிப் சிங்க்’ ஆகவில்லை.
நான் உள்ளே இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பிறகு, “நான் பேசிப்பார்க்கவா இதை?” என்று கேட்டேன். “பேசு, பார்ப்போம்” என்றார் அவர். “பத்து போன் பண்ணிட்டாரு” என்று நான் பேசியதும் சரியாக அந்த அளவுக்கு லிப் பொருந்தியது. இதைப் பார்த்துவிட்டு, என்னை உள்ளே அழைத்தார், எடிட்டர் மோகன் அப்பா.
எடிட்டர் மோகன்
முதுகில் செல்லமாக நான்கு சாத்தி சாத்திவிட்டு, “இவ்வளவு நேரம் பேசினோம், பார்த்துட்டுத்தானே இருந்தே; முதல்லயே சொல்லியிருக்க வேண்டியதுதானே?” என்று செல்லமாகக் கேட்டார். நான் சிரித்துக்கொண்டேன்.
இயக்குநர் பாலாவின் முதல் படம் விக்ரம் நடித்த ‘சேது’. அந்தப் படத்தில் கதாநாயகியின் தந்தையாக நாயர் ராமன் நடித்திருந்தார். அவருக்கு டப்பிங் பேசுவதற்காக ‘வாய்ஸ் டெஸ்ட்’ எடுக்க வரச் சொல்லியிருந்தார்கள்.
சாலிகிராமத்தில் இருந்த சமீரா தியேட்டரில் டப்பிங் நடைபெற்றது. அங்கு இயக்குநர் பாலாவைச் சந்தித்தேன். நாயர் ராமன் சார், சிவகுமார் அண்ணாவிடம் பேசுவது போன்ற காட்சியைத் திரையிட்டார்கள். நான் அந்த வசனத்தைப் பிராமண பாஷையில் பேச வேண்டும். உடனே பேசினேன்.
கேட்டதும் ஓகே சொல்லிவிட்டார். அதை ரொம்ப சிலாகித்தார். நாயர் ராமன் சாருக்கு சிறுவயதிலிருந்தே என்னை தெரியும். அவர், “பாஸ்கர் சின்ன பையனாச்சே, அவன் வாய்ஸ் எனக்கு எப்படி செட் ஆகும்?” என்று கேட்டிருக்கிறார்.
“அவர் பேசியதை பாருங்க” என்று சொல்லி அவரை பார்க்க வைத்தார்கள். பார்த்துவிட்டு, “ரொம்ப நல்லா பேசிருக்கடா” என்று பாராட்டினார். ஒரு முறை சகோதரர் மருதபரணி எழுதிய டப்பிங் படத்துக்காக நான் பேச சென்றிருந்த போது, ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் அங்கு வந்திருந்தார்.
அவர் சொன்னார், “தெலுங்குல இந்தப் படத்தோட படப்பிடிப்புக்குப் போயிருந்தேன். பிரம்மானந்தம் நடிச்சிட்டிருந்தார். ஒரு டயலாக் அவர் சரியாகப் பேசவில்லை. ஆனால், டேக் நன்றாக வந்தது.
அப்போது ஒரு அசோசியேட் “இந்த டயலாக் சரியா வரலை. இதை தமிழில் டப் பண்றது கஷ்டம்” என்று சொன்னதும், “அதை பாஸ்கரு பார்த்துக்கு வாரு’என்று தெலுங்கில் சொன்னதைக் கேட்டேன் என்றார். பிரம்மானந்தம் சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கேட்டதும் எனக்குச் சந்தோஷமாக இருந்தது.
இப்படி, நான், சாய் குமார், சாய் ரவி, ரத்தன் குமார் என அப்போது எல்லோருடனும் டப்பிங்கில் இருந்த காலங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை எத்தனை படங்களுக்கு டப்பிங் பேசினேன் என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. இப்போதும் யாரும் அழைத்தால் இறைவன் அருளால் டப்பிங் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
