மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு வந்த நடிகர் அஜித்குமாரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் அவசர, அவசரமாக வழிபாடு செய்து ருத்திராட்ச மாலையை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.
தமிழகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித்குமார் கார் பந்தய வீரராக உள்ளார். இவர், அடுத்த வாரம் இத்தாலியில் கார் பந்தய போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இந்த கார் பந்தய போட்டியில், நடிகர் அஜித் வெற்றி பெற வேண்டும் என அவரது நண்பர் கார்த்திகேயன் என்பவர், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து, ருத்ராட்ச மாலை வழங்குவதாக வேண்டி கொண்டதாக தெரிகிறது.
இதன்பேரில், ருத்ராக் ஷ மாலையை பெற்றுக்கொண்டு, சிவனை வழிபாடு செய்ய நடிகர் அஜித் நேற்று மாலை கோயிலுக்கு வந்தார். மேலும், கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க வந்த பக்தர்கள், நடிகர் அஜித் வந்ததை பார்த்து அவரை சூழ்ந்து கொண்டனர்.
எனினும், பாதுகாப்புடன் மூலவர் சந்நிதிக்கு சென்ற அஜித்துக்கு மாலை அணிவித்து ருத்ராட்ச மாலை வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டு, கோயிலில் இருந்து வெளியேற முயன்றபோது, பக்தர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர்.
இதனால், தர்ம சங்கடத்தில் மூலவர் சந்நிதியிலிருந்து வெளியேற முடியாமல் 10 நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தார். பிறகு, அங்கிருந்து வேகமாக சென்றார்.
அப்போது, கோயிலில் இருந்தவர்கள் அவரை பின்தொடந்து ஓடிச்சென்றனர். பின்னர், காரில் ஏரினார். ஆனாலும், கார் செல்லமுடியாத அளவில் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து, பாதுகாவலர்கள், அனைவரையும் விலக்கியதால் கார் நீலாங்கரை வீட்டுக்கு புறப்பட்டு சென்றது.














