சென்னை: உபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப் பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபா மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொடுமையான உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாற்றுத்திறனாளியான அவருக்கு அவர் பயன்படுத்தும் சக்கர நாற்காலியைக் கூட கொடுக்காமல் சிறையில் கொடுமைப்படுத்தினார்கள். 10 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த சாய்பாபா, சிறை வாழ்க்கையின் போது அனுபவித்த சித்திரவதைகளின் காரணமாகப் பல்வேறு உடல்நலிவுகளுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார்.
அவரைப் போலவே பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்னும் பலரை அரசு உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது. அவர்களை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.