சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் அனைத்து உணவு வணிகர்களும், கட்டாயம் உரிய உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பலகாரகூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகளில் ஆர்டரின் பேரில் பலகாரம் தயாரிப்பவர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்த பிறகே விற்பனையைத் தொடங்க வேண்டும்.
தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விற்பனை செய்யப்படும் இனிப்பு பெட்டிகள் மற்றும் பொட்டலங்களில் பலகாரம் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி காலம், உணவுப் பாதுகாப்புத் துறை பதிவு எண் மற்றும் சைவ, அசைவ குறியீடு உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
கிருமித்தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கார வகைகளில் கார்மோசின், எரித்ரோசின், பாஸ்ட் கிரீன், மெட்டானில் எல்லோ, ஆரஞ்சு ஆர்.என், ரோடமைன் பி, டார்ட்ராசின் போன்ற 7 வகையான செயற்கை வண்ணங்களையும், இனிப்பு வகைகளில் ஆரஞ்சு ஆர்.என், மெட்டானில் எல்லோ, ரோடமைன் பி ஆகிய வண்ணங்களையும் சேர்க்க அனுமதி இல்லை.
பால் இனிப்புகள் 3 முதல் 5 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்டவை. அவற்றை நீண்ட நாட்கள் கெடாத பிற இனிப்புகளுடன் பரிசு பெட்டிகளில் ஒன்றாக சேர்த்து விற்பனை செய்ய கூடாது.
புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண், foodsafety.tn.gov.in என்ற இணையதளம் அல்லது உணவுப் பாதுகாப்பு நுகர்வோர் செயலி வழியாக பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
