பாரத மொழிகளை ஏற்பது நம் அனைவரின் பொறுப்பு; மொழிகள் இடையே எந்த பகையும் கிடையாது: பிரதமர் மோடி

0
93

மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒரு மொழி, மற்றொரு மொழியை செழுமைப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்தி இலக்கிய மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: பாரதத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது தாய் போன்றது. அந்த தாய் (மொழி) தனது குழந்தைகளுக்கு அறிவை போதிக்கிறாள். ஒரு தாய் தனது குழந்தைகளிடம் பாரபட்சம் பார்ப்பது இல்லை. அனைத்து குழந்தைகளையும் அவள் சமமாக பாவிக்கிறாள்.

இதேபோல, மொழியும் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. மொழி என்பது அனைத்து கருத்துகளையும் ஆதரிக்கிறது. சம்ஸ்கிருதத்தில் இருந்து மராத்தி பிறந்தது. எனினும், பிராகிருத மொழியும் மராத்தி மொழியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்கியிருக்கிறது. மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒரு மொழி, மற்ற மொழியை செழுமைப்படுத்துகிறது. மொழியின் பெயரால் பிரிவினையை தூண்ட முயற்சி மேற்கொள்ளப்படும்போது, நமது மொழிகளுக்கு இடையிலான பிணைப்பு சரியான பதிலை அளிக்கிறது.

பாரதத்தின் மொழிகளை செழுமைப்படுத்துவது, அவற்றை ஏற்றுக் கொள்வது நமது அனைவரின் பொறுப்பு ஆகும். பாரதத்தின் அனைத்து மொழிகளையும் பிரதான மொழிகளாகவே கருதுகிறோம். மராத்தி உட்பட அனைத்து தாய்மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுவதை ஊக்குவிக்கிறோம். இதன்காரணமாக இப்போது மராத்தி மொழியிலேயே பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியை கற்க முடிகிறது. ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக பலரது திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. நமது இலக்கியங்கள் நமது சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவை. அவை சமுதாயத்துக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here