5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா எங்களுக்கு சவால் கொடுப்பார் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது: கடந்த இரண்டு டி 20 உலகக் கோப்பைத் தொடர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு சவால் மிகுந்த அணியாக நாங்கள் இருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பல அணிகளின் இயல்பு இதுதான்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாகவே விளையாடவுள்ளோம். எல்லா முறையும் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்காது. நாங்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால், நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிரடியாக விளையாடுவது எங்களுக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.
இந்திய அணி மிகவும் அற்புதமான அணி. இந்திய அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என நினைக்கிறேன். இரண்டு சிறந்த அணிகள் மோதிக்கொள்வதால், இந்த சவாலை எதிர்கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன். அழுத்தத்தின் கீழ் எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.
அபிஷேக் சர்மா, இந்திய அணிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறார். சிறிது காலமாக அவர், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் எங்களுக்கு எதிரான டி 20 தொடரில் அவர், சவால் அளிப்பார். எந்த வீரரும் உலகின் சிறந்த அணிக்கு சவால் கொடுக்கவே விரும்புவார்கள். அபிஷேக் சர்மா அப்படிப்பட்டவர்களில் ஒருவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
இவ்வாறு மிட்செல் மார்ஷ் கூறினார்.














