ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா அரை சதம் விளாசியதால் தரவரிசையில் சரிவை சந்திக்கவில்லை. மற்றொரு அதிரடி வீரரான இஷான் கிஷன் 871 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் இஷான் கிஷன் 317 ரன்கள் விளாசியிருந்தார்.
தற்போது அபிஷேக் சர்மாவுக்கும், இஷான் கிஷனுக்கும் இடையே 4 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான சாஹிப்சதா பர்ஹான் ஓர் இடத்தை இழந்து 848 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பில் சால்ட்டும் ஓர் இடத்தை பறிகொடுத்து 792 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
இலங்கை அணியின் பதும் நிசங்கா 766 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரரான டிம் ஷெய்பர்ட் 749 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் திலக் வர்மா ஓர் இடத்தை இழந்து 742 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் 738 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தொடர்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2 இடங்களை இழந்து 722 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் 716 புள்ளிகளுடன் ஓர் இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார். அதே அணியைச் சேர்ந்த ஜேக்கப் பெத்தேல் 668 புள்ளிகளுடன் 17 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி முதலிடத்தை இழந்துள்ளார். அவர், 740 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 753 புள்ளிளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானின் அப்ரார் அகமது 736 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடர்கிறார். இங்கிலாந்தின் ஆதில் ரஷித் 721 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் கார்பின் போஷ் 704 புள்ளிகளுடன் ஓர் இடத்தை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 702 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா ஓர் இடத்தை இழந்து 682 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகளின் மேத்யூ போர்டு 667 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்கதேசத்தின் முஸ்டாபிஸுர் ரஹ்மான் 665 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் 663 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் தொடர்கின்றனர். இந்தியாவின் அக்சர் படேல் 639 புள்ளிகளுடன் 6 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ராசா 328 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 299 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சைம் அயூப் 275 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடர்கின்றனர்.
நியூஸிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 3 இடங்கள் முன்னேறி 201 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் ஷிவம் துபே 2 இடங்களை இழந்து 195 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளார்.














