இந்திய ஒருநாள் அணியில் துணைக் கேப்டனான ஷுப்மன் கில், தனக்கும் அபிஷேக் சர்மாவுக்கும் இடையே ‘நச்சுப் போட்டி’ எதுவும் இல்லை என்று மறுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில் அபிஷேக் சர்மா டி20-யில் அன்று காட்டடி சதமெடுத்து ஏகப்பட்ட டி20 சாதனைகளை உடைத்த பிறகே அபிஷேக் சர்மாவை மீடியாக்கள் தூக்கி விடத் தொடங்கியுள்ளன.
இது அபிஷேக் சர்மாவுக்கு நல்லதல்ல. அவர் கால்கள் நகர்வதில்லை, அவர் அதை கவனித்து உத்தி ரீதியாக தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளாமல் விட்டு விடக்கூடாது. புகழ் போதை அழித்த வீரர்கள் ஏராளம், பல உதாரணங்களில் ஒரு உதாரணம் வினோத் காம்ப்ளி.
இந்நிலையில், அணியில் ஷுப்மன் கில் இருப்பது பற்றியே பெரிய கேள்வி எழுந்து வரும் நிலையில் தனக்கும், அபிஷேக் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கும் இடையே நச்சுத்தனமான போட்டி நிலவவில்லை என்று அவர் கூறியுள்ளார்:
“அபிஷேக் சர்மா என் பால்ய கால நண்பன். ஜெய்ஸ்வாலும் நண்பனே. எனவே எங்களுக்கிடையே எந்தவித நச்சுப்போட்டியும் இல்லை. நாட்டுக்காக ஆடும்போது ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்ற உந்துதல், ஆசை அனைவருக்குமே இருக்கவே செய்யும்.
எனவே இவர் நம்மை விட நன்றாக ஆடிவிடக்கூடாது என்றெல்லாம் நினைப்பவன் அல்ல நான். அணிக்காக, நாட்டுக்காக யார் ஆடினாலும் அவர் நன்றாக ஆட வேண்டும் என்றும் நன்றாக ஆடினால் வாழ்த்தவும் வேண்டும் என்று நினைப்பவன் நான்.
ஆஸ்திரேலிய தொடரில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ அதைச் செய்யவில்லை. ஆனால் சில விஷயங்களைச் சரியாகவே செய்தோம் என்றே கருதுகிறேன். தொடரை சமன் படுத்தவோ, ஏன் வெற்றி பெறவோ வாய்ப்புகள் இருந்தன. தொடரை டிரா செய்திருந்தால் நிச்சயம் இப்போது இதைப் பற்றிய பேச்சும் சர்ச்சையும் இருந்திருக்காது.
அணியின் ஆட்டத்தை விமர்சிப்பது தவறு. இப்போதுதான் டி20 உலகக் கோப்பையை வென்றோம். இதற்கு முன்பாக ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றோம். இவற்றையெல்லாம் நாம் கருத்தில் கொண்டால் நல்லது.
இந்த இங்கிலாந்து தொடரை சாம்பியன்ஸ் டிராபிக்கான தயாரிப்புத் தொடராகப் பார்க்க முடியாது. இங்கிலாந்து மிகச்சிறந்த அணி. எனவே ஆதிக்கத்துடன் வெற்றி பெறவே விரும்புகிறோம்” என்றார் ஷுப்மன் கில்.














