‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். இதில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்துள்ளார். ஷோயிங் பிசினஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்கும் இப்படம் அக்.2-ல் வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் விநியோகஸ்தர்
சக்திவேலன், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி பேசும்போது, ‘‘இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்க் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு 3 மணி நேரம் தாருங்கள்; இப்படத்தின் கதையைச் சொல்கிறேன் என்றார். 5 நிமிடத்தில் சொல்ல முடியுமா? எனக் கேட்டேன். அப்படிச் சொன்னால், அது பிடித்திருந்தால், முழுக் கதையைக் கேட்கிறேன் என்றேன். அப்போது அவர் யோசித்து எனக்கு 5 நிமிடம் வேண்டாம்; ஒரே ஒரு வாக்கியத்தில் சொல்கிறேன் என்றார்.
‘ஒரு பேயைக் கடத்திய மனிதனின் கதை…’ என்று அவர் சொன்னதும் மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விஷயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கின. ஃபஹத் பாசில் சிறந்த நடிகர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான்.
சூரி என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல், இசை இல்லாமல் பார்க்கும் போது அழுதேன். சிரித்தேன். அந்த அளவுக்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த சூரி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார் ஃபஹத் பாசில். சூரி கதாபாத்திரத்தை ஓட ஓட விரட்டுவது திவ்யா. அந்த கதாபாத்திரத்தில் சாரா அற்புதமாக நடித்திருக்கிறார்” என்றார்.
