சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சி நடக்கிறது: திமுக அரசு குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்

0
224

தமிழக வரலாற்றிலேயே சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை என திமுக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயத்தைக் காப்பாற்ற எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு வாங்க திமுக அரசு தயாராக இருக்கும் என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் தஞ்சாவூரில் நிகழ்ந்த பயங்கர சம்பவம். கடந்த ஏப்ரல் மாதம், நடுக்காவேரியில் கள்ளச்சாராயம் விற்பவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் தினேஷ் மீது போலி வழக்கு பதிந்து கைது செய்த திமுக அரசின் ஏவல்துறையினர், அவரை விடுவிக்கக் கோரி அவரது இரு சகோதரிகளும் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தபோது, தரக்குறைவாக பேசியதோடு தாமதமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதால் தினேஷின் இளைய சகோதரி கீர்த்திகாவின் உயிர் பறிபோனது.

மறைந்த கீர்த்திகாவின் இறப்புக்கான நியாயத்தைப் பெற்றுத் தரும் பொருட்டு பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணையம் தானாக விசாரிக்க முன்வந்த நிலையில், அப்போதுகூட பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவில்லை திமுக அரசு. பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணையத்தின் டெல்லி அலுவலகத்தில் மே 22-ம் தேதி ஆஜராகுமாறு மே 17-ம் தேதி ஆட்சியரால் பெறப்பட்ட கடிதம் மிகத்தாமதமாக மே 20-ம் தேதி இரவில் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

பட்டியலினத்தவர்களுக்கான தேசிய ஆணயத்தின் முன் அவர்கள் ஆஜராகிவிட்டால், இவ்வழக்கின் உண்மைகள் வெளி வந்துவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் டெல்லிக்கு செல்வதைத் தடுக்கவே காவல்துறை திட்டமிட்ட ஒரு சதியைச் செய்ய முயன்றது என்றே மக்கள் மனதில் சந்தேகம் எழுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அக்குடும்பத்தினர் ஒரே நாளில் எப்படி டெல்லிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்தபோது, நமது பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்த் அய்யாசாமி தனது சொந்த செலவில் அவர்களை விமானத்தில் அனுப்பி வைத்து, குறிப்பிட்ட தேதியிலேயே அவர்களை ஆணையத்தின் முன் ஆஜராக வழி வகை செய்துள்ளார்.

தற்போது வெற்றிகரமாக ஆணையத்தின் முன்பு ஆஜராகி காவல் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் குறித்து எடுத்துரைத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க நீதி கிடைக்கும் என நம்புவோம். மேலும், கள்ளச்சாராயத்தைத் தட்டிக் கேட்டு நியாயத்தைப் பேச வந்த மக்களை அவமானப்படுத்தியதோடு அவர்களின் உயிரே போகும் அளவுக்கு மனிதாபிமானமின்றி செயல்படும் திமுக அரசின் உண்மை முகம் மேலுமொருமுறை வெளிவந்துள்ளது. தமிழக வரலாற்றிலேயே சமூகநீதியைக் குழிதோண்டி புதைத்த இப்படியொரு காட்டாட்சியை யாரும் கண்டதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here