கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம்

0
222

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்கொள்ளிக்காட்டில் பிரசித்திபெற்ற பொங்கு சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல் அதிகாரியாக ஜோதி (வயது 40) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மன்னார்குடி ஒத்தை தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் கூடுதல் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.

பொங்கு சனீஸ்வரர் கோவிலில் எழுத்தராக சசிகுமார்(50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தொகை நிலுவையில் இருந்து வருகிறது. நிலுவைத்தொகையை வழங்கும்படி சசிகுமார், செயல் அதிகாரி ஜோதியிடம் கேட்டு வந்தார். அதன்படி ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜோதி கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாய் நோட்டுகளை செயல் அதிகாரி ஜோதியிடம் வழங்கும்படி சசிகுமாரிடம் கூறினர்.

அதன்படி நேற்று செயல் அதிகாரி ஜோதி, மன்னார்குடி ஒத்தை தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் பணியில் இருந்தபோது அவரிடம், ரசாயனம் தடவிய பணத்தை சசிகுமார் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையிலான போலீசார் ஜோதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில், ஊதிய உயர்வு வழங்க கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி, கைதான பெண் அதிகாரி ஜோதியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here