யாசகர்களுக்கு தானம் அளிப்போர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் விளங்குகிறது. தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த பெருமையை இந்தூர் பெற்றிருக்கிறது. அடுத்த கட்டமாக யாசகர்கள் இல்லாத நகரம் என்ற இலக்கை எட்ட இந்தூர் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆகிஷ் சிங் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்தூர் நகரில் யாசகர்களுக்கு தானம் அளிப்போர் மீது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்படும். யாசகம் எடுப்பதை தடுக்க இந்தூர் முழுவதும் டிசம்பர் இறுதி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இந்தூர், லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களை, யாசகர்கள் இல்லாத முன்மாதிரி நகரங்களாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தூரில் யாசகம் அளிப்போர் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














