உத்தரபிரதேசத்தில் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக பதான்யூ மசூதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து மகா சபை தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 3-ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுல்தான்கள் ஆட்சியிலிருந்த டெல்லியின் கீழ் பதான்யூ அமைந்திருந்தது. சுல்தான் வம்சத்தின் மன்னரான குத்புதீன் ஐபக்கிற்கு பின் அவரது மருமகன் இல்துமிஷ் டெல்லியை ஆட்சி செய்தார். அப்போது அவர் பதான்யூவில் பிரம்மாண்ட ஜாமா மசூதியை 1225-ல் கட்டினார். ஒரே சமயத்தில் 23,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் இந்த மசூதி உள்ளது. டெல்லியின் ஜாமா மசூதியை அடுத்து நாட்டின் மிகப்பெரிய மசூதியாகவும் உள்ளது. மத்திய அரசின் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) பராமரிப்பின் கீழ் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் பட்டியலில் பதான்யூ மசூதி உள்ளது. நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இம்மசூதியில் தற்போது 5 வேளை தொழுகை நடைபெறுகிறது.
இந்நிலையில் நீலகண்டன் மகாதேவ் பெயரில் இருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டு இந்த மசூதி கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதனுள் கள ஆய்வு நடத்தவும் அதுவரை மசூதியின் அடியில் பூஜைகள் நடத்தவும் அனுமதி கோரி பதான்யூ செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் இந்து மகா சபையின் உ.பி. நிர்வாகி முகேஷ் படேல் கடந்த 2022-ல் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஆதாரமாக பழமையான ஒரு நூலின் குறிப்புகளை சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வழக்கின் முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் அஸ்ரார் அகமது கூறும்போது, “இந்த மசூதி மீது வழக்கு தொடுக்க, கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இவ்வழக்கை தொடுத்தவர்களுக்கு அதற்கான சட்டரீதியான தகுதியும் இல்லை. இந்த மனுவை விசாரணையை ஏற்பது தொடர்பான வாதங்கள் டிசம்பர் 3-ம் தேதி (இன்று) தொடரும்” என்றார்.
உ.பி.யின் சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் நவம்பர் 24-ல் நடைபெற்ற கள ஆய்வுக்கு பிறகு அங்கு கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜஸ்தானின் அஜ்மீரிலுள்ள காஜா மொய்னுத்தீன் சிஷ்தி தர்கா மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் முன்பாக பதான்யூ மசூதி மீது தொடுக்கப்பட்ட வழக்கும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பதான்யூவில் விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.
மசூதியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. டிரோன் கேமராக்கள் மூலமாகவும் ஆய்வு நடத்தப்படுகிறது. வீடுகளின் மாடியில் கற்கள் இருந்தால் அவற்றை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து-முஸ்லிம் சமூகத்தினர் இடையே அமைதி கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. மசூதியை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.














