கொளத்தூரில் திறக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் போல வடசென்னையில் ரூ.50 கோடியில் 10 நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைக்கவுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உள்ள முழுநேரம் மற்றும் பகுதிநேர கிளை நூலகங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி அமைச்சர் நேற்று களஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீ்ழ், ரூ.5,776 கோடியில் 225 திட்டங்கள் 11 துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிஎம்டிஏ பங்களிப்பாக ரூ.1,613 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சிஎம்டிஏ சார்பில் 28 பணிகள் எடுக்கப்பட்டு 25 பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னைக்கு உட்பட்ட 10 இடங்களில் உள்ள நூலகங்களை ரூ.20 கோடியில் மேம்படுத்தவும், அப்பகுதிகளில் ரூ.30 கோடியி்ல் பகிர்ந்த பணியிட மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வடசென்னையில் திருவிக நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூரில் இத்திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் நூலகங்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தரவும், 50 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் வசதி குறைவான நூலகங்களை இடித்துவிட்டு, புதிதாக நூலகங்களை கட்டவும் திட்டமிட்டுள்ளோம்.
உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவருவது, புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டியது என்று இரு பிரிவாக பிரித்து பணிகளை வரும் பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மேயர் ஆர்.பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.