தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர். சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் அதிகாலையிலே எழுந்து எண்ணெய் தேய்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வாழ்த்து தெரிவித்தனர். தெருக்களில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரத்துடன் தீபாவளியை தொடங்கினர். நண்பர்கள், உறவினர்களுடன் உணவருந்தி, சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர்.
தீபாவளியையொட்டி அதிகாலை முதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. தொடர் விடுமுறை என்பதால் பலர் குடும்பங்களாக திருச்செந்தூர், பழநி போன்ற கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னையில் வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே தீபாவளியை முன்னிட்டு காலை முதல் இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பட்டாசு, இனிப்புகளுக்கு அடுத்தப்படியாக இறைச்சி எடுத்து சமைப்பது என்பது மக்களின் விருப்பமாக இருப்பதால் இறைச்சி கடைகளிலும் மக்கள் குவிந்திருந்தனர். அதேபோல சந்தைகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. ஒருபுறம் குடும்பத்துடன் உற்சாகம் என்றால் இளைஞர்கள் மத்தியில் சினிமாக்கள் பிரபலம். அந்த வகையில் இளைஞர்கள் தீபாவளி அன்று வெளியான புதுப்படங்களுக்கு தங்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் அழைத்து கொண்டு சென்று திரையரங்கில் பொழுதைக் கழித்தனர்.
விடுமுறை தினம் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, தீவுத்திடல், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, பிரபல வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். சிறுவர் முதல் முதியோர் வரை பலர் கடற்கரைக்கு குடும்பத்துடன் வருகை தந்து, ஒன்றாக அமர்ந்து பேசி மகிழ்ந்து நேரத்தை போக்கினர். பூங்காங்களிலும் மாலை வேளைகளில் மக்கள் திரண்டிருந்தனர். இரவு நேரத்தில் பட்டாசுகளை வெடித்தும், தொலைக்காட்சியில் புதிய திரைப்படங்களை கண்டும், வீட்டில் செய்த பலகாரங்களை சாப்பிட்டும் தீபாவளியை சந்தோஷத்துடன் நிறைவு செய்தனர்.
பெரும்பாலான இல்லங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் கவுரி நோன்பு கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி வீட்டில் இருக்கும் பெண்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து கவுரி நோன்பை நேற்று மேற்கொண்டனர். மாலையில் அதிரசம், பணியாரம் போன்றவற்றை சமைத்து அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று படைத்தனர். சுவாமி தரிசனத்துக்கு பின்னர் கோயிலில் படைக்கப்படும் பலகாரங்கள் விரதமிருந்த பெண்களுக்கு வழங்கப்பட்டன.