பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், பிளாட்டூன், க்ரை-பேபி, டெட் மேன் என பல படங்களில் நடித்துள்ளார். பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் பட வரிசையில் நடித்த ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சில படங்களைத் தயாரித்துள்ள இவர், ‘தி பிரேவ்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங்க் ஆஃப் மேட்னஸ்’. இதில் ரெக்கார்டோ ஸ்கேமர்சியோ, ஸ்டீபன் கிரஹாம், அல் பசினோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இத்தாலியில் ரோம் பட விழாவில் திரையிடப்பட்டது. இவ்விழாவில் ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இத்தாலியைச் சேர்ந்த நவீன ஓவியரும் சிற்பியுமான மோடிக்லியானி (Modigliani) என்பவரின் பயோபிக்தான் ‘மோடி, த்ரீ டேஸ் ஆன் த விங்க் ஆஃப் மேட்னஸ்’ படமாக உருவாகியுள்ளது. நவீன ஓவியரான இவர், பிரான்சில் பணிபுரிந்துள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள ஜானி டெப், “நடிகர் அல் பசினோதான் 1997-ம் ஆண்டு மோடிக்லியானி பற்றிச் சொன்னார். அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 20 வருடத்துக்குப் பிறகு மீண்டும் அது பற்றி பேசிய அல் பசினோ, ‘மோடிக்லியானி கதையை நீதான் இயக்க வேண்டும் என நினைக்கிறேன்’ என்றார். அதனால்தான் நான் மீண்டும் இயக்குநர் ஆனேன்” என்று தெரிவித்துள்ளார்.