பி. எஸ். என். எல். தொழிற்சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி. எஸ். என். எல். பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மாற்றங்கள் தொடர்பாக உடனடி தீர்வு காண வேண்டும். 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் இ. எஸ். ஐ. ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ராஜூ, மாநிலத் தலைவர் பழனிச்சாமி, ராஜகோபால், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.