பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0
246

பணியின்போது பயணி ஒருவர் தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வியாசர்பாடி பணிமனையைச் சேர்ந்த பேருந்து, நேற்று முன்தினம் இரவு மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில், ஜெ.ஜெகன் குமார் நடத்துநராகப் பணியாற்றி வந்தார்.

அப்போது, பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய் தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் ஜெ.ஜெகன் குமார் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, நடத்துனர் கொலையை கண்டித்து நேற்று அதிகாலை அனைத்து பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதோடு, மெழுகுவர்த்தி ஏந்தி நடத்துநருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு பணிமனைகளில் காலை 4.20 முதல் 5.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதையடுத்து லாளர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் பணிக்கு திரும்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும். பிரச்சினைகளைத் தவிர்க்க தொழிற்சங்கங்களோடு ஆலோசித்து புதிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும்.

பணியில் இருக்கும் தொழிலாளர்கள் தாக்கப்பட்டால் அது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்ற புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலையான நடத்துநர் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here