கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகனமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவியது. இது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. எண்ணெய் படலம் படிந்து பறவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும் மீன்பிடி படகுகள், வலைகள் மீது பிசின் போன்ற கரிய நிற பெட்ரோலியக்கழிவு படிந்து பாழாகின. குடியிருப்புசுவர்கள், தெருக்கள், நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது.
அதைத்தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வுதாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிகழ்வு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவையும் பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், ‘‘இந்த பெட்ரோலிய எண்ணெய் கழிவுகள் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளது. பல்வேறு முகமைகள் மூலமாக 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டருக்கு மேல் நீர் கலந்த எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன. குப்பை கழிவுகள்மற்றும் மண்ணுடன் 660 டன் எண்ணெய் கழிவுகளும் அகற்றப்பட்டுள் ளன. எண்ணெய் கசிவால் தாவரங்கள்மற்றும் விலங்குகளுக்குஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐஐடிவல்லுநர்கள் ஆய்வுசெய்துள்ளனர்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதிபுஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்சத்யஜித், ‘‘சேகரிக்கப்பட்ட எண்ணெய் கழிவுகள் அடிப்படையில், எண்ணெய் கழிவை வெளியேற்றிய சிபிசிஎல் நிறுவனம் ரூ.73 கோடியை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், ‘‘மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த இழப்பீட்டு தொகை போதாது. அதைஅதிகரிக்க வேண்டும்’’ என வாதிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு ஜன.24-க்கு தள்ளிவைக்கப்பட்டது.