ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்ததாக பெண் டிஐஜி, ஏடிஎஸ்பி உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

0
221

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கிய பெண் டிஐஜி, ஏடிஎஸ்பி உட்பட சிறைத்துறை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டு வேலைகளை செய்வதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர், வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சிவக்குமாரை சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ஆயுள்தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் சென்னை புழல்-2 சிறைக்கும் மாற்றப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கு கடந்த 21-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் டிஐஜி ராஜலட்சுமி, ஏடிஎஸ்பி அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here