பொதுப்பணி, நீர்வளத் துறைகளில் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்: சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்

0
317

தமிழக பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை (என்.எம்ஆர்) பணி வரன்முறை செய்திடக் கோரி தமிழ்நாடு தொழில்நுட்ப களப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறையில் தினக்கூலி பணியாளர்களாக (என்.எம்.ஆர்)10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றிய பணியாளர்களுக்கு, 10 ஆண்டு பணி முடித்திருந்தால் பணி ஆணை வழங்க வேண்டும் என்று அரசின் விதிமுறை உள்ளது.

இதைப் பின்பற்றி பணியாளர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் கணக்கிட்டு கல்வித் தகுதிக்கேற்ப பணிப்பயன் மற்றும் பணப்பயன், பணி ஆணை வழங்குதல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்நுட்ப களப் பணியாளர் சங்கம் (பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை) சார்பில் சென்னை சேப்பாக்கம் பொதுப் பணித்துறை வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர் சங்கத் தலைவர் சி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் எல்.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்கள் எம்.லட்சுமணன், எஸ்.நாராயணன், எ.எழிலரசன், எம்.முருகவேல், பி.முனிரத்தினம் துணைச் செயலாளர்கள் பி.வீரசெல்வம், எம்.ரமேஷ்குமார், வி.நாகராஜ், கே.கோபிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மண்டல பொறுப்பாளர் எம்.அலமேலு வரவேற்றார். இப்போராட்டத்தில் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here