சென்னை: இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மாநாட்டுக்கு கட்டுரைகளை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐஏஎப்) அதன் உறுப்பு நிறுவனங்களுடன் இணைந்து, விண்வெளி குறித்த சர்வதேச மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு மே 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் பங்கேற்று விவாதிக்கவும், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவும் முன்வரலாம்.
அதன்படி சர்வதேச விண்வெளி சமூகத்துடன் இணையும் வகையில் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆய்வில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு தனித்துவமான தளத்தை வழங்கும். இதில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர் கட்டுரையின் சுருக்கத்தை அனுப்ப வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோ தலைமையகத்தின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புத்தாக்க இயக்குநரக துணை இயக்குநர் முகமது சாதிக்கை 88931 07176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.














