கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. குடியிருப்புகளை சூழ்ந்த கடல் நீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் உடமைகள் சேதமடைந்ததோடு பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் தகவல் அறிந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சம்பவ இடத்திற்கு நேற்று (17-ம் தேதி) மாலை நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். வீடுகளில் உள்ள கடல் மண்ணை துரிதமாக அகற்றுவதற்கு தனது சொந்த செலவில் சிறிய ஹிட்டாச்சி ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து கொடுத்தார். மேலும் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து குளச்சல் துறைமுகத்தில் ஏற்ப்பட்ட பாதிப்பையும் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் பங்கு அருட்பணியாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் உடனிருந்தனர்.