துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி 8-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் முனைப்பில் உள்ளது.
2023 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றிருந்தது.இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனினும் அது சுலபமில்லை என்றே கருப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை 10 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.