புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அண்டை மாநிலங் களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில் காற்று தர மேலாண்மை ஆணைத்தின் உத்தரவுகள், குறிப்பாக தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, ஏ.ஜி. மசிக், ஏ.அமானுல்லா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது ஹரியானா, பஞ்சாப் அரசுகள் வழக்குப் பதிவு செய்வதில்லை. பெயரளவு அபராதம் விதித்து அவர்களை விட்டு விடுகின்றன. பயிர் கழிவு எரிக்கப்படும் இடத்தை இஸ்ரோ சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அப்படி எதையும் காணவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது காற்று தர மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு முற்றிலும் எதிரானது.
பயிர் கழிவுகளை எரிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். உறுதியான நடவடிக்கைகள் இல்லாவிடில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.














