ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜம்மு-காஷ்மீரில் மொத்த முள்ள 90 தொகுதிகளுக்கு மூன்றுகட்டங்களாக நடைபெற்ற பேரவைதேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்றன. இந்நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஆம் ஆத்மியும் கட்சி எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்ததால் அந்தக் கூட்டணிக்கு பேரவையில் பலம் 54-ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக உமர் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மாநாட்டு அரங்கில் பதவியேற்புவிழா நேற்று நடைபெற்றது. முதல்வராக உமர் அப்துல்லாவும், துணை முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய தலைவரான சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றனர். அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டு களுக்கு பிறகு தேசிய மாநாட்டுக் கட்சியின் அரசு அமைத்துள்ளது. உமர் அப்துல்லாவை தொடர்ந்து அமைச்சர்களாக தேசிய மாநாட்டு கட்சியின் மெந்தர் ஜாவேத் அகமதுராணா, ஜாவித் அகமது தர், சாகினாஇட்டூ, சதீஷ் சர்மா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ராகுல், பிரியங்கா பங்கேற்பு: இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா, முன்னாள் முதல்வரும் மக்கள்ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி ஆகியோர்கலந்துகொண்டனர்.
இண்டியா கூட்டணியில் உள்ளசமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் கனிமொழி எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
போலீஸாருக்கு உமர் உத்தரவு: முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில் போலீஸாருக்கு புதிய உத்தரவை முதல்வர் உமர் அப்துல்லா பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் உமர் கூறியிருப்பதாவது: சாலைகளில் முதல்வர், அமைச்சர்கள், விஐபிக்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்துதல், பொதுமக்களை தொந்தரவு செய்தல் போன்றவற்றை போலீஸார் குறைக்கவேண்டும்.
இதுதொடர்பாக போலீஸ் டிஜிபியிடம் நான் பேசியுள்ளேன். நான் செல்லும் பாதைகளில் போக்குவரத்தைத் தடை செய்யக்கூடாது என்று நான் வலியுறுத்தி உள்ளேன். மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவை மிகவும் குறைத்துவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். வாகனங்களில் சைரன்களை ஒலிக்க விடுவதும் குறைக்கப்படும். இதை என்னுடைய அமைச்சர்களும் பின்பற்றுவார்கள். மக்களுக்கு சாதகமான வகையில் நாங்கள் நடந்துகொள்வோம். நாங்கள் மக்களுக்குச் சேவை செய்யவே வந்துள்ளோம். அவர்களை தொந்தரவு செய்வதற்கு அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றுள்ள உமர் அப்துல் லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துஉள்ளார்.