அகமதாபாத்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த 17 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து டிஜிட்டல்அரெஸ்ட் மோசடி மேற்கொள்ளப் படுகிறது. மோசடியில் ஈடுபடுபவர்கள், தங்களை விசாரணை அதிகாரிகள் என கூறி சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வீடியோ கால் செய்து, அவர்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவிப்பார்கள். பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தாங்கள்சொல்வதற்கு ஒத்துழைக்காவிட்டால் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டுவர். பின்னர், குறிப்பிட்ட தொகையை தந்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க உதவுவதாகக் கூறி, பணத்தை பறித்து விடுவர்.
தற்போது இத்தகைய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அதிகரித்து வருகிற நிலையில், குஜராத் காவல் துறை இது தொடர்பான சோதனையில் இறங்கியது. இதையடுத்து 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள 13 பேர் குஜராத் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.














