பெங்களூரு: போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
வங்க தேசம், மியான்மர், பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளைச் சேர்ந்த பலர் இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஜிகனியில் குடும்பத்தார் 4 பேருடன் வசித்து வந்த பாகிஸ்தானியர் ஒருவர் கடந்த மாதம் 29-ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சட்டவிரோதமாக போலி பாஸ்போர்ட்மூலம் பெங்களூருவில் தங்கிஇருந்த மேலும் 4 பேர்கடந்த 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தினர். அதில் 48 வயதான பாகிஸ்தானியர் ஒருவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 13 பேர் சிக்கினர். இதையடுத்து போலீஸார் 14 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறுகையில், ‘‘பெங்களூருவில் மேலும்14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாநிலம் முழுவதும் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானில் உள்ளகராச்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் மேதி என்ற மத அமைப்பின் சார்பில் இந்தியா, வங்கதேச நாடுகளுக்கு வந்துள்ளனர். மத பிரச்சாரத்துக்காக பெங்களூருவில் தங்கியிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். இதுவரை கைதான 22 பேரையும் காவலில் எடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.