பிரதமரின் போர் நிறுத்த முயற்சிக்கு அனைத்து கட்சிகளும் வரவேற்பு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

0
322

 ‘பிரதமரின் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்த முயற்சியை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்கின்றன’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மெரினாவில் விமானப்படை வீரர்களின் வான்வெளி சாகசம் வரவேற்கத்தக்கது. அதைக்காண கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் இறந்ததாகத் தெரியவில்லை. மயக்கம், ஏற்கெனவே இருந்த நோய்களால் இறந்ததுபோல் தெரிகிறது. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என, எங்களது கட்சியினரும், அரசியல் நோக்கர்களும் கூறுகின்றனர். கருத்து கணிப்புகளை நான் ஏற்பதில்லை. இஸ்ரேல், பாலஸ்தீனம் போரால் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை மத்திய அரசுதான் விளக்க வேண்டும். போரை நிறுத்த பிரதமர் மோடி முயற்சிக்கிறார். அதை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்கின்றன.

ஈரானில் உற்பத்தி குறைந்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யும், ரஷ்யாவில் எரிவாயும் உற்பத்தி செய்யப்படுவதால், கடுமையான விலை உயர்வு இருக்காது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்படும் என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. காங்கிரஸ்ஆட்சி அமைத்ததும் முழு மாநிலஅந்தஸ்து பெற வலியுறுத்துவோம். தமிழகத்தில் திமுக கூட்டணி வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here