கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

0
253

ஒருகால பூஜை திட்ட கோயில் அர்ச்சகர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024–25-ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “ஒருகால பூஜைத்திட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன்கருதி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

500 மாணவர்கள்: இதை செயல்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் 500 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதன் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதன் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர் கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயனடைவர். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறைச் செயலர் பி.சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் பி.என்.தர், கூடுதல் ஆணையர்கள் இரா.சுகுமார், சி.ஹரிப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here