பெங்களூரு: சாவர்க்கர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னட பத்திரிகையாளர் திரேந்திரா எழுதிய, ‘காந்தியின் கொலையாளி: நாதுராம் கோட்சேயின் உருவாக்கம்’ என்ற நூலை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்றுமுன்தினம் மாலை பெங்களூருவில் வெளியிட்டார். அப்போது தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “சாவர்க்கர் பிராமணராக இருந்தாலும் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். அவர் ஒருபோதும் பசுவதைக்கு எதிராக இருந்ததில்லை. இறைச்சி சாப்பிடுவதை வெளிப்படையாக ஊக்குவித்துள்ளார்” என குறிப்பிட்டார். இந்த உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பாஜக எம்பி அனுராக் தாக்கூர், “காங்கிரஸார் பொய் பேசுவதில் வல்லவர்கள். அந்த கட்சிபொய்களின் தொழிற்சாலை. சாவர்க்கரை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” என எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல கர்நாடகபாஜக தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர்ஆர்.அசோகாவும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு தினேஷ் குண்டுராவ், “மீண்டும் ஒருமுறை உண்மையைப் பேசியதற்கு மன்னிக்கவும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.