புதுடெல்லி: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சக்தி வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான திருவிழா அனைவருக்கும் மங்களகரமானதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கவுடில்யர் பொருளாதார மாநாடு இன்று தொடங்கி வரும் 6-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனம் இந்த மாநாட்டு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள்இதில் பங்கேற்று இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகின் தென்பகுதி நாடுகளின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.