மகாத்மா காந்தியடிகளின் 156-வதுபிறந்த நாளை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 156-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கும் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கும் அதனருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிமரியாதை செலுத்தினார். அவருடன்மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாணவ, மாணவியரின் பஜனை நிகழ்ச்சியையும், சர்வோதயா சங்கத்தினரின் ராட்டை நூல் நூற்பு நிகழ்வையும் ஆளுநர் பார்வையிட்டார். பின்னர் கதர் பவன்சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சென்னை அண்ணா சாலை கதர் பவன், காந்தி கிராமம், தென்காசி அமர்சேவா சங்கம் ஆகியவற்றின் ஸ்டால்களை ஆளுநர்திறந்துவைத்தார். 12 தூய்மைப்பணியாளர்கள், 7 காந்தியவாதிகளை சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இதேபோல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.