100 ரன்களுக்கு ஆட்டமிழக்க தயாராக இருந்தோம்: சொல்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா

0
309

கான்பூர்: மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முடிவை பெற வேண்டும் என்பதற்காக 100 ரன்களுக்கு கூட ஆட்டமிழக்க தயாராக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக இந்திய அணி சுமார் 230 ஓவர்களை இழந்தது. இதில் முழுமையாக இரு நாட்கள் ஆட்டம் கைவிடப்பட்டதும் அடங்கும். முதல் நாள் ஆட்டத்திலும் 35 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. 4-வது ஆட்டத்திலும் முழுமையாக 90 ஓவர்கள் வீசப்படவில்லை.

4-வது நாள் ஆட்டம் தொடங்கிய போது வங்கதேச அணியை முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததும் இந்திய அணி டி 20 போன்று அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணியின் 2 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளையில் அந்த அணியை ஆட்டமிழக்கச் செய்தது. இதன் பின்னர் எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி 2-வது செஷனில் வெற்றியை வசப்படுத்தியது.

வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: இரண்டரை நாட்களை இழந்ததால், 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் வங்கதேச அணியை விரைவாக விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய விரும்பினோம். இதன் பின்னர் எங்களால் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். ரன்கள் குவிப்பதுடன், அதிக அளவிலான ஓவர்களை பெற வேண்டியது இருந்தது.

ஆடுகளத்தின் தன்மைக்கு எதிராக நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறந்த முயற்சி. இது அபாயகரமான முயற்சிதான். ஏனெனில் இதுபோன்று பேட்டிங் செய்யும் போது குறைந்த ரன்களுக்குள் ஆட்டமிழக்க நேரிடலாம். ஆனால் நாங்கள், 100 முதல் 120 ரன்களுக்குள் ஆட்டமிழக்கவும் தயாராக இருந்தோம். பயிற்சியாளராக ராகுல் திராவிட்டுடன் எங்களுக்கு அருமையான நேரம் இருந்தது, ஆனால் வாழ்க்கை நகர்கிறது. தற்போது கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் விளையாடுகிறோம். நான் அவருடன் விளையாடியுள்ளேன், அவர் எப்படிப்பட்ட மனநிலையுடன் வருகிறார் என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here