ட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2013-ம் ஆண்டுக்குபிறகு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழகஅரசு மாற்றியமைக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆன பிறகும் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி விரைந்து மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் பைக் டாக்சிக்கு தடை விதிக்கவேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆட்டோஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த வகையில் சென்னையில் கோட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். எழும்பூர் பழைய சித்ரா திரையரங்கம் அருகே பேரணியாகச் செல்ல முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.ஆர்ப்பாட்டம் குறித்து ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியம் கூறும்போது, “11 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. அபராதம் என்ற பெயரில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி, ஓட்டுநர்களை அரசு துன்புறுத்துகிறது.
தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஆட்டோக்களுக்கு ரூ.10ஆயிரம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி நடைபெற்றது” என்றார்.
தமிழகம் முழுவதும் 50 மையங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 6 ஆயிரம்ஓட்டுநர்கள் கலந்து கொண்டதாக சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி தெரிவித்தார்.














