ஆட்சேபனை கருத்து: வருத்தம் தெரிவித்தார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி

0
243

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நிலத்தின் உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக பெண் வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் .இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (செப்.20) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை கேட்டிருந்தது.இந்தநிலையில், சனிக்கிழமை மதியம் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கும் போது இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஸ்ரீஷானந்தா தனது அறிக்கையை வாசித்தார். அதில் அவர், “நீதித்துறையின் நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்ட சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அது சொல்லப்பட்ட கருத்துக்கு மாறாக செய்தியாக்கப்பட்டிருக்கிறது. அந்த அவதானிப்புகள் எந்த ஒரு தனிநபரையோ அல்லது சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத்தில் தெரிவிக்கப்பட்டது இல்லை. அந்த அவதானிப்புகள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமூகத்தின் எந்தவொரு பிரிவினரையோ காயப்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

நீதிபதி ஸ்ரீஷானந்தா தனது அறிக்கையினை வாசிக்கும் போது, பெங்களூரு வழக்கறிஞர் சங்கத்தின் (ஏஏபி) சில உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். நீதிமன்ற நடவடிக்கைகளின் வீடியோக்கள், சில யூடியூப்களில் தவறாக தலைப்பிட்டு பகிரப்படுவதாகவும், அது சிக்கலை உருவாக்குவதாகவும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here