2020-ல் முதல் முறை எம்எல்ஏ; 2024-ல் டெல்லி முதல்வர்: அசுர வளர்ச்சி பெற்ற ஆதிஷி

0
221

020-ம் ஆண்டு டெல்லி கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டஆதிஷி தற்போது டெல்லி முதல்வராகி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியதில் ஆதிஷிக்கு முக்கிய பங்கு உண்டு. நெருக்கடியான அந்த காலகட்டங்களில் அவரின் செயல்பாடு பலரின் பாராட்டை பெற்றது.

பல முக்கிய துறைகளை வைத்துக்கொண்டு திறமையுடன் செயல்பட்டார். அதனால்தான், டெல்லியில் மூவர்ண கொடியை ஏற்றுவதற்கு ஆதிஷியின் பெயரை ஆளுநரிடம் முன்மொழிந்தார் அர்விந்த் கேஜ்ரிவால். 43 வயதான ஆதிஷி, 2013 -ம்ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து ஜூலை 2015 முதல் ஏப்.2018 வரை சிசோடியாவின் ஆலோசகராக பணியாற்றினார்.

2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரை எதிர்த்து போட்டியிட்ட ஆதிஷி தோல்வியை தழுவினார். இருப்பினும், மனம் தளராமல் 2020-ல் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார். ஆம் ஆத்மி கட்சிக்கு இக்கட்டான கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சவால்களை சமாளித்து தீரத்துடன் செயல்பட்டதன் காரணமாக தற்போது ஆதிஷி பெயரை டெல்லி முதல்வர் பதவிக்கு அர்விந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.ஆதிஷி சொல்வது என்ன? – புதிய முதல்வரை தேர்வு செய்ய, டெல்லியில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகார குழு கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தியது. கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேஜ்ரிவால் கருத்துகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடைபெற்றது. இதில், மாநில கல்வித் துறை அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங் பெயரை கேஜ்ரிவால் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக ஆதிஷிதேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆதிஷி கூறும்போது, “எனது அரசியல் குரு கேஜ்ரிவாலுக்கு நன்றி. அவர் எனக்கு மிகப் பெரிய பொறுப்பை அளித்துள்ளார். டெல்லி மக்களின் அன்பை பெற்ற அண்ணன் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். அதனால், எனக்கும், டெல்லி மக்களுக்கும் இது துயரமான நேரம். மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடந்த 2 ஆண்டுகளாக கேஜ்ரிவாலுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் அவர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம். தேர்தலுக்கு பிறகு கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். தற்போது அவர் ராஜினாமா செய்தாலும், டெல்லி மக்களை பொறுத்தவரை அவரே முதல்வர். தியாகத்தின் உதாரணமாக அவர் திகழ்கிறார்” என்றார் ஆதிஷி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here