வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

0
262

வெள்ளி விழா, பொன் விழா,பவள விழாவின்போது ஆட்சியில் இருப்பதுபோல, நூற்றாண்டு விழாவின் போதும் திமுக ஆட்சியில் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை நந்தனத்தில் நேற்று நடந்த திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதல்வர் பேசியதாவது: தொண்டர்களின் வியர்வை, மூச்சுக் காற்றால்தான் திமுக கம்பீரமாக, தலை நிமிர்ந்து நிற்கிறது. நீங்கள் இல்லாமல் திமுக இல்லை; நானும் இல்லை.

கடந்த 1967-ம் ஆண்டு எனது 13 வயதில் கோபாலபுரத்தில் திமுக இளைஞர் அணியை தொடங்கி,53 ஆண்டு இயக்கத்துக்கும், தமிழகத்துக்கும் உழைத்த உழைப்புக்கான அங்கீகாரம்தான் தற்போதுபவளவிழா காணும் திமுகவுக்கு நான் தலைவராக இருப்பது.திமுக தலைவர் என்ற தகுதியை வழங்கியது நீங்கள்.தமிழகத்தின் முதல்வர் என்ற தகுதியை வழங்கியது தமிழக மக்கள். கழகமும், தமிழகமும் என் இரு கண்களாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நேரத்தில், பவள விழா கொண்டாடுவதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

விருதாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்கு உரியவர்கள். பவள விழா விருது என்பதால் கூடுதல் சிறப்பு உள்ளது. உங்களை போன்றவர்களின் உழைப்பால்தான் கட்சி உன்னதமான நிலைக்கு வந்துள்ளது. ஓர் இயக்கம் 75 ஆண்டுகள் தாண்டியும் நிலைத்திருப்பது சாதாரண சாதனை அல்ல. இதற்கு நமதுஅமைப்பு முறைதான் காரணம். லட்சம் கிளைக் கழகம் கொண்டதுநமது தலைமைக் கழகம். அதற்கான வலுவான அடித்தளத்தை தலைவர்கள் உருவாக்கி தந்துள்ளனர்.

உலகத்தில் எந்த இயக்கமும் உடன்பிறப்பு என்ற பாச உணர்வுடன் கட்டமைக்கப்படவில்லை. அந்த உணர்வுதான் நம் எல்லோரையும் இயக்குகிறது. வெள்ளிவிழா, பொன்விழா, பவள விழா கொண்டாடிய ஆண்டுகளில் திமுக ஆட்சியில் உள்ளது.வரும் 100-வது ஆண்டும் நிச்சயம்ஆட்சியில் இருக்கும். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்.இதை ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள்மீதான நம்பிக்கையில் கூறுகிறேன். யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். தொடர் வெற்றிகளால் நூற்றாண்டை நோக்கி முன்னேறுவோம். இந்த உணர்வு வெற்றிச் சரித்திரமாக மாற வேண்டும். அதற்கு பவள விழா ஆண்டில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

காலம் தாழ்த்தாதீர்கள்: விழாவில், மு.க.ஸ்டாலின் விருது பெற்ற பழனிமாணிக்கம் தனது ஏற்புரையில், “திமுகவில் வெள்ளி விழா, பொன்விழாவை கருணாநிதியும், பவளவிழாவை நீங்களும் கொண்டாடியுள்ளீர்கள். வைரவிழா ஆண்டை கொண்டாடவும், எங்களை வழிநடத்தவும் நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டவேண்டும்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் மேகம் சூழ்ந்துவிட்டது. உங்களுக்கும், மேடையில் உள்ள தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா? பேராசிரியரைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை. பேராசிரியர் பெரிய மனதுடன் தலைவரை துணை முதல்வராக அன்று ஏற்றுக்கொண்டார். நாங்களும் ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்” என்றார்.

விழாவில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாலவாக்கம் த.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here