தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோட்டில் இரணியல் சர்வோதய சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி மணிமண்டபம் உள்ளது.
இங்கு அமர்ந்த நிலையில் கருங்கல்லில் செய்யப்பட்ட மகாத்மா காந்தி உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் சமூக விரோதிகளால் இந்த சிலை உடைக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்ற தந்த மகாத்மா காந்தியின் திருவுருவ சிலையை உடைத்த சமூக விரோதிகளுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மகாத்மா காந்தியின் சிலையை உடைத்த சமூக விரோதிகளுகளை மாவட்ட காவல்துறை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் குமரி காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.














