புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் மரியடேவிட் (56) ஆட்டோ டிரைவர். கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி இரவு காப்புக் காடு சந்திப்பு பகுதியில் வைத்து ஐரேனிபுரம் பகுதி நிர்மல் (26) என்பவருக்கும் மரியடேவிட்டுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதுக்கடை பகுதியில் உள்ள நெடுமானி குளம் பகுதியில் வைத்து நிர்மல், ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த பென்னிட்டாப் (36), நட்டாலம் பகுதி காட்வின் ஜாண் ராஜ் (29), தேங்காப்பட்டணம் பகுதி பரமசிவன் (36), ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த எழில் குமார்(25) ஆகிய 5 பேர் சேர்ந்து மரியடேவிட்டை வெட்டிக் கொன்றதாக தெரிய வந்தது.
இதில் கைதான நிர்மல் மீது ஏற்கனவே புதுக்கடை, தக்கலை, கருங்கல் போலீஸ் நிலையங்களிலும், பென்னிடாப் மீது கருங்கல், தக்கலை போலீஸ் நிலையங்களிலும், காட்வின் ஜாண் ராஜ் மீது களியக்காவிளை, மார்த்தாண்டம் உட்பட பல நிலையங்களில் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எழில் குமார் மீதும் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நான்கு பேர் மீதும் மாவட்ட எஸ்பி குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அழகு மீனா உத்தரவின் பேரில் 4 பேரும் நேற்று (10-ம் தேதி) குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.