விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

0
23

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட்டு மரகதம் குமரவேல், சத்யபாமா வெற்றி பெற்றுள்ள நிலையில், விராலிமலை, கரூர் தொகுதிகளில் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களான விஜயபாஸ்கர்களும், அதே எதிர்பார்ப்புடன் இடைத்தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

விட்டதை பிடிக்க திமுகவும், சரிந்த செல்வாக்கை மீட்க அதிமுகவும் தீவிரமாக களம் இறங்க தயாராகி வருகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, நீதிமன்றத் தடையால் தேர்தல் தள்ளிப்போய் உள்ள விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

விராலிமலையில் தவெக சார்பில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சி.விஜயபாஸ்கர் தினந்தோறும் மக்களைச் சந்தித்து வருகிறார். முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திமுக தரப்பில் மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் அல்லது பழனியப்பன் ஆகிய இருவரில் ஒருவர்தான் வேட்பாளர் என்கிறார்கள். அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பழனிவேல், துணைச் செயலாளர் நல்லூர் கருப்பையா அல்லது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சிவசாமி ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

கரூரில் தவெக சார்பில் போட்டியிட தனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அப்போது நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியுடன் உள்ளார்.

அதேபோல, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கட்சிக்காக பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளதால் தனக்கு கட்சித் தலைமை மீண்டும் வாய்ப்பு தரும் என தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனும் நம்பிக்கையுடன் உள்ளார்.

அங்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. அவரே வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், தொகுதி முழுவதும் செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

திமுக தரப்பில் செந்தில் பாலாஜி தேர்தல் பணிகளைக் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி கடந்த தேர்தலிலேயே விஜய்க்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார்.

விஜய்யின் வெற்றிச் சான்றிதழை அவர்தான் பெற்றுக்கொண்டார். அதனால் அவருக்கே வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். மேலும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 2016-ல் இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார். அதனால் அவரது மகன் ஜவஹருக்கு இந்த தொகுதியை கேட்கிறார்.

இதேபோல, முதல் முதலில் திருச்சியில் ரசிகர் மன்றம் தொடங்கிய ஆர்.கே.ராஜா, தற்போதைய மாவட்டச் செயலாளர் குடமுருட்டி கரிகாலன் ஆகியோரும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்போதே தொகுதியை வலம் வரத் தொடங்கிவிட்டனர்.

திமுக சார்பில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இனிகோ இருதயராஜ் அல்லது புதுமுகம் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது. அதிமுக சார்பில் ஆவின் கார்த்திகேயன், மனோகரன் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் என்றும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் வெற்றியைத் தொடர்ந்து மத்திய மண்டலத்தில் உள்ள இந்த 3 தொகுதிகளிலும் வெற்றி தங்களுக்கே என தவெகவினரும், கடந்த பொதுத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல், தக்க வைத்துக் கொண்டதால், இன்னும் சற்று கடுமையாக உழைத்தால் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என்ற நம்பிக்கையில் திமுகவினரும், சரிந்த செல்வாக்கை இந்த இடைத்தேர்தல்களில் தூக்கி நிறுத்தினால்தான் எதிர்காலம் உள்ளது என்ற உறுதியில் அதிமுகவினரும் காத்திருக்கின்றனர்.

விராலிமலை சுவர்களில் இப்போதே ‘விசில்’ சத்தம்

விராலிமலை தொகுதி முழுவதும் தவெகவின் ‘விசில்’ சின்னத்தை சுவர்களில் வரைந்து அதகளம் செய்து வருகின்றனர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்.

தாராபுரம் தொகுதியில் விஜயபாஸ்கர் பம்பரமாய் சுற்றி வேலை பார்த்ததால், அவரது உழைப்பை கட்சித் தலைமை பாராட்டியதாகவும், இதனால் விராலிமலை தொகுதி தவெக சீட் அவருக்கே என்றும், வெற்றியும் நிச்சயம் என்றும் நம்பிக்கையுடன் முழங்குகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஆனால், விஜயபாஸ்கர் மீது கட்சி மேலிடத்துக்குச் சில அதிருப்திகள் உள்ளன. அதனால்தான் அவருக்குப் பெரிய மாநிலப் பொறுப்புகள் வழங்கப்படாமல், விராலிமலை தொகுதியை மட்டும் மையமாக வைத்து மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

தவெக இவருக்குச் சீட் வழங்கினாலும் கூட, விராலிமலையில் திமுக மற்றும் அதிமுகவின் பலமான செல்வாக்கை எளிதில் கடந்து வருவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எது எப்படியோ, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே விராலிமலை தொகுதி சுவர்கள் ‘விசில்’ சத்தத்தால் அதிரத் தொடங்கிவிட்டன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here