கபடி, காதல், கல்யாணம் | ‘டைகர்’ ராஜரத்தினம் 8

0
23

‘டைகர்’ ராஜரத்தினத்தின் கடவுள் நம்பிக்கை அவருடைய கபடி அளவுக்கு உறுதியானது இல்லை என்றாலும், ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்கிற கண்ணதாசன் பாடல் அவருக்கு ரொம்பப் பொருத்தமானதுதான். ராஜரத்தினம் ஒரு காட்டாற்று வெள்ளம் என்றால், அவருடைய மனைவி கிளாடிஸ் ஓர் அமைதியான நதி.

மேலும், அவரும் ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர் என்பதால் தன்னுடைய கணவரின் கபடிப் பயணத்தில் உற்ற தோழியாக, தேர்ந்த ரசிகராக, நல்ல ஆலோசகராக, உற்சாகப்படுத்தும் இணையராக இருக்க முடிந்தது.

ராஜரத்தினத்தையும் கிளாடிஸையும் இணைத்தது கபடிதான். “அவரோட விளையாட்டுதான் என்னைக் கவர்ந்தது. அவ்வளவு சூப்பரா விளையாடுவாரு. ஆனால், அவருக்குக் கபடிதான் முதல் மனைவி” என்று சிரிக்கிறார் கிளாடிஸ்.

இருவருக்கும் 1984இல் திருமணம் நடந்தது. மனைவியோடு தேனிலவுக்குச் செல்லாமல், ஐசிஃப் அணியோடு மகாராஷ்டிராவில் உள்ள யாவத்மாலில் நடந்த கபடிப் போட்டிக்குச் சென்றார் ராஜரத்தினம். வீடு திரும்பும்போது காலில் பெரிய காயம்.

“நடக்கவே கஷ்டப்பட்டார். அவ்வளவு அடிபட்டிருந்தாலும், ஆட்டத்தில ஒரு குறையும் வைக்கல; அவருதான் அந்தப் போட்டியோட பெஸ்ட் பிளேயர். அதுக்குக் கிடைச்ச சைக்கிள் பரிசோட, ஒரு ஐசிஃப் வீரர் அவரைக் கைத்தாங்கலாகக் கொண்டு வந்து, வீட்டில் விட்டார்” என்று கிளாடிஸ் நினைவுகூர்ந்தார்.

ராஜரத்தினம் பல காயங்களுடன் விளையாடுவதைப் பார்த்திருந்தாலும் கிளாடிஸ் அவர் கபடியில் பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற ஆர்வத்தை விடவே இல்லை. “எல்லாரும் இவ ஏன் வீட்டுக்காரரை ஆட விடுறா என்று என்னைக் குறை சொன்னாலும், நான் கவலைப்பட்டதே இல்லை. என் கணவர் கபடியின் உச்சத்துக்கு போகணும்னு நான் வெறியாக இருந்தேன். அவரை மாதிரி பிளேயரை நான் பார்த்ததே இல்லை” என்று உணர்வு பொங்கச் சொன்னார்.

கிளாடிஸும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நீளம் தாண்டுதலில் அவருடைய சாதனை பல ஆண்டுகள் முறியடிக்கப்படாமல் இருந்தது. கூடைப்பந்தும் கபடியும் விளையாடியிருக்கிறார். “எங்க அப்பா டீச்சராக இருந்தார். அவருடைய மாணவர்கள் பல விளையாட்டுகளை விளையாடுவதைப் பார்த்து வளர்ந்தேன். என்னோட பெரிய அண்ணன் குண்டு எறிதலில் சாம்பியன்” என்று விளையாட்டில் தனக்கு எப்படி ஆர்வம் வந்தது என்பதை விளக்கினார்.

கிளாடிஸ், ராஜரத்தினத்தை ஒரு கபடிப் பயிற்சியாளராகத்தான் முதலில் சந்தித்திருக்கிறார். “நான் அப்ப நாகர்கோவில் பெண்கள் கிறித்துவக் கல்லூரி கபடி அணியில் இருந்தேன். அவரு ஹோலி கிராஸ் அணியோட கோச்சாக இருந்தாரு.

இரண்டு அணிகளும் சேர்ந்து பயிற்சி எடுப்போம். அப்படி ஒரு கேம்ப்லதான் அவரை முதல்ல பார்த்தேன். அப்பவே அவரு ஒரு சூப்பர் ஸ்டார்தான்; ஆனா அது எனக்குத் தெரியாது” என்று என்று சிரிக்கிறார் கிளாடிஸ்.

ராஜரத்தினம் நல்லா விளையாடும் வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவாராம். “சிறந்த கபடி வீரர்கள் எல்லாம் சிறந்த பயிற்சியாளர்கள் ஆவதில்லை. ஆனா, அவரு அவ்வளவு பெரிய பிளேயராக இருந்தாலும் நல்லா சொல்லிக் கொடுப்பாரு. என்ன, திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுத்து கத்துக்காதவங்ககிட்ட கொஞ்சம் கோபப்படுவார்” என்ற கிளாடிஸ், கணவரைப் போன்றே ரைட் ஆர்ச் தடுப்பு ஆட்டக்காரராக இருந்திருக்கிறார்.

ராஜரத்தினம் விளையாடும் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்தவுடன்தான், அவருடைய முழுத்திறமை கிளாடிஸுக்குத் தெரிய ஆரம்பித்தது. “அவரு இறங்கினாலே ஆடியன்ஸ் போடும் சத்தம் காதைக் கிழித்துவிடும். பாயும் புலி, தாவும் சிறுத்தை; புடிச்சுப் பாருன்னு கத்துவார்கள். உள்ளே போனா ஸ்கோர்தான். அவரு பாயிண்ட் எடுத்துதான் பார்த்திருக்கிறேன்; கொடுத்துப் பார்த்ததில்லை. ரெய்டு போகும்போது ஜம்ப் சூப்பரா அடிப்பாரு. ரெண்டு, மூணு பேரு இருந்தாலும் அசால்டா தாண்டிக் குதிப்பாரு” என்று கபடி விளையாடும் சிறுவர்களின் உற்சாகத்தோடு பேசினார் கிளாடிஸ்.

கபடி ஒரு கடினமான விளையாட்டு என்பதை அறிந்திருந்ததால், களத்தில் அவர் கணவர் படும் காயத்தையும் சிந்தும் ரத்தத்தையும் பார்த்து கிளாடிஸ் பயப்பட்டதே இல்லை. “ஒரு முறை வாய்க்குக் கீழே அடிபட்டு ரத்தம் கொட்டிக்கொண்டிருக்கும் போது, ஒண்ணுமே நடக்காத மாதிரி கட்டுப் போட்டுட்டு அவர் ஆடியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

எங்களோட திருமணத்திற்கு முன்பு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் அவருக்குத் தலையில அடிபட்டு வெளியே தூக்கிக்கிட்டுப் போனாங்க. அவரு திரும்ப வர மாட்டாருன்னு எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. மேட்ச் முடிய அஞ்சு நிமிஷம் இருக்கும் போது திரும்பி களத்துக்கு வந்துட்டார். அந்த மேட்ச்சை மறக்கவே மாட்டேன்” என்றார் கிளாடிஸ்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here