சிக்மா: விமர்சனம் – இயக்குநராக ‘பாஸ்’ ஆனாரா ஜேசன் சஞ்சய்?

0
24

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் மகனும் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என்ற செய்தியே ‘சிக்மா’ படத்தின் மீது ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. லைகா என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் பின்னணியோடு களமிறங்கியுள்ள ஜேசன் சஞ்சய் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா என்று பார்க்கலாம்.

நிதி நெருக்கடியில் தவிக்கும் குரு (சந்தீப் கிஷன்), மறைந்த தனது தாயின் நினைவாக இயங்கி வரும் நலிவடைந்த நூலகத்தைப் பராமரித்து வருகிறார். உள்ளூர் தாதாவுக்குப் பெரிய தொகையைக் கடனாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர், தன் ஆடியோ புக்ஸ் யூடியூப் சேனல் மற்றும் ஏஐ குரல் முயற்சிகள் மூலம் அதிலிருந்து மீளப் போராடுகிறார். ஆர்.ஜே சாம் (ஃபரியா அப்துல்லா) தன் தந்தையின் பழங்காலப் பொருட்கள் விற்கும் கடை வருமானம் தராததால் குருவைப் போலவே பணத் தேவையில் இருக்கிறார்.

இவர்களுடன் குருவின் நண்பர்களான டாக்டர் நீல் (ராஜு சுந்தரம்), கவிதை கணேஷ் (அன்பு தாசன்) ஆகியோர் இணைகிறார்கள். இன்னொரு புறம் பெரும் பணக்காரரான கோட்லபாடி வீரா ரெட்டி (சம்பத் ராஜ்), போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வின்சென்ட் (ஷிவ் பண்டிட்) ஆகியோர். ஹீரோவின் குழு வில்லன்களின் பாதையில் குறுக்கிடும்போது சில சம்பவங்கள் நடக்கின்றன. இதன் பிறகு என்ன ஆகிறது என்பதே ‘சிக்மா’ படத்தின் கதை.

சட்டவிரோத சூதாட்ட விடுதிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட கேங்ஸ்டர் கும்பல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைகள் இந்திய சினிமாவில் ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்ட ஒன்றுதான். ‘சிக்மா’ படமும் அதே சலிப்பூட்டும் பாணியில்தான் தொடங்குகிறது. பெரிய லாக்கர், பழங்காலப் பொருள் போல இருக்கும் ஒரு விசித்திரமான சாவி என தொடங்கும் படம் பெரியளவில் சுவாரஸ்யங்கள் எதுவும் இல்லாமலே நகர்கிறது.

படம் முழுவதும் ஒருவித ‘கூல்’ தன்மையை காட்ட வேண்டும் என்ற இயக்குநரின் ஆர்வம் தெரிகிறது. ஆனால் திரைக்கதையில் புதுமைகள் ஏதுமின்றி அதே பழைய பாணியிலேயே படம் செல்வது பெரும் ஏமாற்றம்.

‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் வெற்றிக்குப் பிறகு பிரபலமானவர்களின் முகமூடிகளை அணிந்து கொண்டு திருடுவது போன்ற காட்சிகள் பல படங்களில் இடம்பெறுவதை பார்க்க முடிகிறது. அதேபோன்ற காட்சியை இயக்குநர் இதிலும் இடம்பெறச் செய்திருக்கிறார். ‘விக்ரம்’ படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்கள் திரையில் தோன்றுவதைப் போல இதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகத்தின் போதும் பெயர்கள் திரையில் காட்டப்படுகிறது. இவற்றிலாவது புதிய ஐடியாக்களை யோசித்திருக்கலாம்.

புரூஸ் லீயின் ‘என்டர் தி டிராகன்’ போன்ற நாஸ்டால்ஜியா விஷயங்களை ஒரு டிரிப்யூட் போல சேர்த்திருந்தாலும், அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கெல்லாம் மேலாக, கேத்தரின் தெரசா ஆடும் தேவையற்ற ஐட்டம் பாடல் எதற்கு? “ஆப்ஜெக்ட்டிஃபை பண்ணித் தொலைக்காத” என்ற வரி பாடலில் இடம்பெற்றாலும், கேமராவின் கோணங்கள் கேத்தரினின் உடலை மட்டுமே சுற்றிச் சுற்றி வருவது நகைமுரண்.

ஹீரோவாக சந்தீப் கிஷன் தன் பங்களிப்பை நேர்த்தியாக செய்துள்ளார். ஃபரியா அப்துல்லாவும் குறையின்றி தன் இருப்பைப் பதிவுசெய்கிறார். ராஜு சுந்தரம், அன்பு தாசன், சம்பத் ராஜ் ஆகியோரும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர்.

படத்தில் பாராட்டுக்குரிய விஷயம், அதன் தொழில்நுட்பக் குழு மட்டுமே. கலை இயக்குநர் பெஞ்சமின் நூலகத்தின் அழகையும், சூதாட்ட விடுதியின் அமைப்பையும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தின் லைட்டிங், நூலகத்தின் ஜன்னல்கள் வழியே வரும் வெளிச்சத்தை பிரதிபலித்து படத்திற்கு ரிச் லுக்கை தருகிறது. தமனின் பின்னணி இசை சுமார் ரகம். 

நெல்சன் பாணியிலான டார்க் காமெடியை படத்தில் கொண்டுவர இயக்குநர் முயன்றுள்ளார். முதல் பாதியில் ஆங்காங்கே வரும் நகைச்சுவைகள் ஓரளவு கைகொடுத்துள்ளன. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் பல காமெடி காட்சிகள் செயற்கையாக மாறிவிட்டன. கார் பார்க்கிங்கில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி உட்பட பல ஆக்‌ஷன் காட்சிகள் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. 

படத்தில் எங்கும் பதற்றமோ அல்லது கதாபாத்திரங்களுடனான பிணைப்போ நமக்கு வர மறுக்கிறது. நாயகனின் கடன் பிரச்சனை, அவரது நூலகப் பாசம், நாயகி உடனான காதல், வில்லன்களின் சதித் திட்டங்கள், ஏன் அந்த செல்ல நாய்க்கு ஏற்படும் ஆபத்து கூட பார்வையாளர்களாகிய நம் மனதில் எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. குரு மற்றும் சாம் இருவருக்கும் ஏன் அவ்வளவு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது என்பதற்கான சரியான காரணம் கதையில் அழுத்தமாகப் பதியவில்லை.

ஸ்பை கேமரா மற்றும் நாயகன் போடும் திட்டங்கள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சுவாரஸ்யங்கள் தென்பட்டாலும், அவை ஒரு முழுமையான அனுபவத்தை தரத் தவறிவிட்டன.

ஒரு சாதாரண அறிமுக இயக்குநராக இருந்தால் பட்ஜெட் மற்றும் தயாரிப்புக் கட்டுப்பாடுகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், ஜேசன் சஞ்சய்க்கு கிடைத்த பிரம்மாண்ட பட்ஜெட்டுக்கு, சற்றே எளிமையான, வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தனது வருகையை பலமாக பதிவு செய்திருக்கலாம். ஆனால் டெக்னிக்கலாக ஒரு வலுவான டீம் அமைந்தும் பலவீனமான திரைக்கதையால் தன்னுடைய முதல் வாய்ப்பை அவர் தவறவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஓர் அறிமுக இயக்குநரின் முதல் முயற்சி என்ற அளவைத் தாண்டி, போதுமான எழுத்து பலம் இல்லாததால், புதுமைகள் இல்லாத வழக்கமான க்ரைம் திரில்லர் படங்களின் வரிசையிலேயே ’சிக்மா’வும் சேர்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here