பெங்களூருவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை திருடி தமிழகத்தில் விற்பனை செய்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 65 காலி சிலிண்டர்களும், ரூ.2.49 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் தனியார் காஸ் சிலிண்டர் ஏஜென்சி இயங்கி வருகிறது. கடந்த 13-ம் தேதி இரவு குடோனில் இருந்த 173 காலி சிலிண்டர்களை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மறுநாள் காலையில் வாகனத்தில் 74 சிலிண்டர்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து காஸ் சிலிண்டர் ஏஜென்சியின் மேலாளர் ரமேஷ்குமார் இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது டெலிவரி ஊழியர் ஜெயசீலன் (64) வேறொரு வாகனத்தில் சிலிண்டர்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் ஜெயசீலனின் வீடு, குடோன் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். அதில் ரூ.4.45 லட்சம் மதிப்புள்ள 65 காலி சிலிண்டர்கள் சிக்கின. அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து ரூ.2.49 லட்சம் ரொக்கப் பணத்தையும், 4 சக்கர சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து இந்திரா நகர் போலீஸார் கூறுகையில், “காஸ் ஏஜென்சியில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் ஜெயசீலன் பெங்களூருவில் சிலிண்டர்களை திருடி தமிழகத்தில் விற்பனை செய்துள்ளார்.
குறிப்பாக ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட ஊர்களில் உள்ள சட்ட விரோத சிலிண்டர் விற்பனையாளர்களுக்கு அதிக விலைக்கு சிலிண்டர்களை விற்பனை செய்துள்ளார். அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
சிலிண்டர் குடோனில் வெடி விபத்து
பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளியில் மூர்த்தி (65) என்பவர் காலி இடத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து சட்டவிரோதமாக காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென 3 சிலிண்டர்கள் வெடித்ததில் 30 அடி உயரத்துக்கு தீப்பிளம்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் காரணமாக கொட்டகை முற்றிலுமாக சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அந்தப் பகுதியில் மக்கள் யாரும் வசிக்காததால் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. இதுகுறித்து பையப்பனஹள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














