ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 4-ம் நிலை வீரரும் 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் 49-ம் நிலை வீரரான மரியானோ நவோனேவை எதிர்த்து விளையாடினார்.
முதல் செட்டை மரியானோ நவோனே 7-6 (7-5) என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் பின்னர் அடுத்த 2 செட்களை ஜோகோவிச் 7-5, 6-4 என தன்வசப்படுத்தினார். 4-வது செட்டை ஜோகோவிச் எளிதாக கைப்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய மரியானோ நவோனே 6-2 என கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் அமைந்த கடைசி செட் ஆட்டம் பரபரப்பானது. எனினும் பதற்றம் இல்லாமல் விளையாடிய மரியானோ நவோனே 6-1 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். முடிவில் 4 மணி நேரம் 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (5-7), 7-5, 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். அமெரிக்க ஓபன் தொடரில் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதன்முறையாகும். ஜோகோவிச் அமெரிக்க ஓபன் முதல் சுற்றில் இதற்கு முன்னர் 19 முறை விளையாடி ஒன்றில் கூட தோல்வி அடையாமல் இருந்திருந்தார்.
மேலும் 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு எந்தவொரு கிராண்ட் ஸ்லாம் தொடரின் முதல் போட்டியிலும் ஜோகோவிச் தோல்வியடைந்ததில்லை. இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், 91-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஹூகோகஸ்டனை எதிர்கொண்டார். இதில் டேனியல் மேத்வதேவ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 6-7 (3-7), 6-1, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 94-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் கோல்மேன் வாங்கை வீழ்த்தினார்.
15-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக் 6-4, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜே.ஜே,வூல்பை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 29-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கேமரூன் நோரி, 19-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் நுழைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் 64-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் எலெனா கேப்ரியலா ரூஸையும், 19-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 106-ம் நிலை வீராங்கனையான சுலோவேனியாவின் வெரோனிகா எர்ஜாவெக்கையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
9-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் 91-ம் நிலை வீராங்கனையான சோலனா சியராவையும், 11-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் 169-ம் நிலை வீராங்கனையான ஸ்ட்ரோம் ஹன்டரையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.















